யார் பொய்யர்? (பாகம் – 05)

செப்டம்பர் 16, 2007

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

நமது உயிரினும் மேலான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை பொய்ர் என்றும் புரட்டர் என்றும் ஒரு கூட்டத்தினர் இணையத்தில் அவதுர்றுகளை எழுதியும் பரப்பியும் வருகின்றார்கள் அவர்களுக்கு குர்ஆன் ஹதீஸ் ஒளியில் இஸ்லாமிய இணையப் பேரவையின் சார்பாக கொடுக்கப்படும் பதில்களின் தொடரின் நான்காம் பாகம் இது. முதல் நான்கு பாகங்களை வாசிப்பதற்கு (பாகம்-01) , (பாகம் – 02), (பாகம் – 03) , (பாகம் – 04)

www.iiponline.org

பாகம் : 5/5

இவர்களுக்குக் கிடைத்த அந்த ஓரே ஆதாரம் (?)

// அனாஸ் கூறியதாவது: ஒருவன் அல்லாவின் தூதரிடம் வந்து எப்போது இறுதித்தீர்ப்பு நேரம் வரும் என்று கேட்டான். அன்சார் ஜாதியைச் சார்ந்த ஒரு சிறுவன் அங்கிருந்தான். அவன் பெயரும் முகம்மது. அல்லாவின் தூதர் சொன்னார், “இந்த சிறுவன் வாழ்ந்திருந்தால், இறுதித்தீர்ப்பு நேரம் இவன் வயதாவதற்குள் வந்துவிடும்”

அயீஷா கூறியதாவது: ஒரு முறை பாலைவனத்தில் இருக்கும் அரபியர்கள் அல்லாவின் தூதரிடம் வந்து எப்போது இறுதி தீர்ப்பு நாள் வரும் என்று கேட்டார்கள். அதற்கு அவர்களில் இருப்பவர்களிலேயே இளைய சிறுவனைப் பார்த்து “இஇறுதித் தீர்ப்பு நேரம் வரும்போது இந்த சிறுவன் உயிரோடு இருப்பானேயாகில், இந்த சிறுவன் முதியவனாகியிருக்க மாட்டான்.”

சிந்திக்கும் திறனுள்ள மனிதர்களே! கேளுங்கள் முல்லாக்களிடம்! அந்த சிறுவர்கள் வயது முதிர்வதற்குள் இறுதித்தீர்ப்பு நாள் வந்துவிட்டதா? 1400 வருடங்களாகி இந்த இஸ்லாமே பொய் என்று தெரியவில்லையா? முகம்மது பொய் சொன்னான் என்பதற்கு இதற்கு மேல் என்ன ஆதாரம் வேண்டும்? அதுவும் கடவுள் சொன்னதாக சொல்லி பொய்களை சொல்லியிருக்கிறான் என்பதை உணர முடியவில்லையா? ஏன் உங்களால் இந்த பொய்யை விட்டு வர முடியவில்லை? ஏன்? //

தங்களின் கோர சிந்தனையில் உதித்த அக்மார்க் பொய்களை மொழி பெயர்ப்பாக கட்டவிழ்த்துவிட்டு அதிலிருந்து விவாதம் வைத்துள்ளனர். மேற்கண்ட இந்த ஹதீஸ் இறுதித்தீர்ப்பு நாளைப் பற்றிச் சொல்லவில்லை. மாறாக ஒரு குழுவின் மரணத்தைப் பற்றி சொல்கிறது. இப்படித்தான் இவர்களின் அபத்தக்கட்டுரை முழுவதும் பொய்களும் அவதூறுகளும் மடைதிறந்த வெள்ளமாய் காட்சியளிக்கிறது. ஒரு துறையில் ஒருவர் ஆய்வு மேற்கொள்ள வேண்டுமென்றால் அத்துறையைப் பற்றிய அறிவு அவரிடம் முழுமையாக இருக்கவேண்டும். தன்னைப் படைத்த இறைவனையே பிரித்தறிந்து சரியாக உணர முடியாத இவர்கள், நபி நாயகம் (ஸல்) அவர்களின் பொன் மொழிகளை, தங்களை ஹதீஸ்கலை வல்லுனர்களாக எண்ணிக்கொண்டா ஆய்வு செய்ய கிளம்பியிருக்கிறார்கள்?

இந்த ஹதீஸை ஆய்வு செய்வதற்கு முன்னால் மறுமை நாளைப் பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது என்பதை முதலில் இவர்கள் விளங்கி இருக்க வேண்டும். அல்லாஹ்வைத்தவிர இறுதிநாளைப் பற்றிய ஞானம் எவருக்கும் இல்லை என்று திருக்குர்ஆன் கூறுகிறது. இதில் எவருக்கும் என்பதில் நபி (ஸல்) அவர்கள் உட்பட மனிதர்கள் அனைவரும் அடங்குவர். எனவே நபி (ஸல்) அவர்களுக்கும் மறுமை எப்போது வரும் என்பது தெரியாது. இதை நபி (ஸல்) அவர்களே அறிவித்துள்ளார்கள்.

நிச்சயமாக அந்த (கியாம) நேரம் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே இருக்கிறது. (அல்குர்ஆன் 31:34)

நபி(ஸல்)அவர்கள் ஒரு நாள் மக்கள் மத்தியில் இருந்தார்கள். அப்போது ஜிப்ரீல் (அலை) அவர்கள் (மனிதரின் தோற்றத்தில் வந்து நபி -ஸல்-) அவர்களிடம் ஈமான் என்றால் என்ன? என்று கேட்டார். அதற்கு நபியவர்கள், ஈமான் என்பது அல்லாஹ்வையும் அவனுடைய வானவர்களையும் அவனுடைய சந்திப்பையும் அவன் தூதர்களையும் நீர் நம்புவது. மேலும், மரணத்திற்குப் பின் எழுப்பப்படுவதையும் நீர் நம்புவது எனக் கூறினார்கள். இஸ்லாம் என்றால் என்ன? என்று கேட்டார். அதற்கவர்கள், இஸ்லாம் என்பது அல்லாஹ்வுக்கு(எதனையும்) நீர் இணையாகக் கருதாத நிலையில் அவனை மட்டுமே நீர் வணங்குவதும் தொழுகையை நிலைநிறுத்தி வருவதும் கடமையாக்கப்பட்ட ஜகாதை நீர் வழங்கி வருவதும் ரமலான் மாதத்தில் நீர் நோன்பு நோற்பதுமாகும் என்று கூறினார்கள்.

இஹ்ஸான் என்றால் என்ன? என்று கேட்டார். அதற்கவர்கள், (இஹ்ஸான் என்பது) அல்லாஹ்வை (நேரில்) காண்பதைப் போன்று நீர் வணங்குவதாகும். நீர் அவனைப் பார்க்கா விட்டாலும் நிச்சயமாக அவன் உம்மைப் பார்த்துக் கொண்டு இருக்கிறான் என்றார்கள். அடுத்து மறுமை நாள் எப்போது வரும்? என்று கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அதைப் பற்றிக் கேட்கின்ற உம்மை விட கேட்கப்படும் (நான்) மிக்க அறிந்தவரல்லர். எனினும் அதன் (சில) அடையாளங்களைப் பற்றி உமக்குச் சொல்கிறேன். அவை: ஒரு அடிமைப் பெண் தனக்கு எஜமானாகப் போகிறவனை ஈன்றெடுத்தல். மேலும் கறுப்பு நிற ஒட்டகங்களை மேய்த்துக் கொண்டிருந்த மக்கள் உயர்ந்த கட்டிடங்கள் கட்டித் தமக்குள் பெருமையடித்துக் கொள்ளல். ஜந்து விஷயங்களை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறியமாட்டார்கள் என்று கூறிவிட்டு, மறுமை நாளைப் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே உள்ளது என்ற (31:34) வசனத்தை ஓதிக் காட்டினார்கள். பின்னர் அம்மனிதர் திரும்பிச் சென்று விட்டார். அவரை அழைத்து வாருங்கள் என்றார்கள். சென்று பார்த்த போது அவரைக் காணவில்லை. அப்போது நபி (ஸல்) அவர்கள், இவர் தான் ஜிப்ரீல்! மக்களுக்கு அவர்களின் மார்க்கத்தைக் கற்றுக் கொடுக்க வந்திருக்கிறார் என்றார்கள்.
(அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல்கள் : புகாரீ 50, முஸ்லிம் 10)

(நபியோ) மறுமையின் நிகழ்வுநேரம் பற்றி உம்மிடம் அவர்கள் ‘அது எப்போது வரும்?’ என்று கேட்கிறார்கள். அந்த நேரம் பற்றிக் குறிப்பிட உமக்கு என்ன இருக்கிறது? உமது இறைவனிடமே அதன் முடிவு உள்ளது. நிச்சயமாக நீர், அதைப் பயப்படுவோருக்கு நீர் எச்சரிக்கை செய்பவர்தான்’ (அல்குர்ஆன் 79:42-45).

அவர்கள் உம்மிடம் இறுதித் தீர்ப்பு நாள் எப்பொழுது வரும் என்று வினவுகிறார்கள் நீர் கூறும் ”அதன் அறிவு என் இறைவனிடத்தில் தான் இருக்கிறது அது வரும் நேரத்தை அவனைத் தவிர வேறு எவரும் வெளிப்படுத்த இயலாது (அல்குர்ஆன் 7:187).

இப்போது விஷயத்திற்கு வாருங்கள். இவர்கள் தான்தோன்றித் தனமாக மொழிபெயர்ப்பு செய்துள்ள அந்த ஹதீஸைதான் தங்களிடமுள்ள பலமான ஆதாரமாக வெளியிட்டு அவர்களின் ஆக்கத்தில் பலமுறை பதிந்திருக்கின்றனர். இதை சரியான முறையில் விளங்கிக் கொண்டால் பொய்யன் யார்? என்பதைப் புரிந்து கொள்ளலாம். மேற்கண்ட இந்த அறிவிப்பு நபிவழிக் கோர்வைகளான புகாரியில் 6511 வது ஹதீஸாகவும், முஸ்லிமில் 7335 வது அறிவிப்பாகவும் பதிவாகியுள்ளது. அந்த ஹதீஸூம் அதன் சரியான மொழி பெயர்ப்பும் பின்வருமாறு

ஸஹீஹூல் புகாரி 6511 வது ஹதீஸின் அரபி மூலம்

حدثني صدقة أخبرنا عبدة عن هشام عن أبيه عن عائشة قالت كان رجال من الأعراب جفاة يأتون النبي صلى اللهم عليه وسلم فيسألونه متى الساعة فكان ينظر إلى أصغرهم فيقول إن يعش هذا لا يدركه الهرم حتى تقوم عليكم ساعتكم قال هشام يعني موتهم

இதன் தமிழ் மொழிபெயர்ப்பு

அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் சொன்னதாக ஹிஷாம் பின் உர்வா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:

கடின சுபாவம் படைத்த கிராமவாசிகள் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து ‘மறுமை நாள் எப்போது’ என்று கேட்பார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அவர்களிலேயே வயதில் சிறியவரான ஒருவரை நோக்கி ‘இவர் உயிர் வாழ்ந்தால், இவரை முதுமை அடைவதற்கு முன்பே உங்கள் மீது மறுமை சம்பவித்துவிடும்’ என்று கூறுவார்கள். இங்கு ‘மறுமை’ (ஸாஅத்) என்பது மரணத்தைக் குறிக்கும் என அறிவிப்பாளர் ஹிஷாம் பின் உர்வா (ரழி) அவர்கள் கூறினார்கள்.

குர்ஆனுக்கு அடுத்த அந்தஸ்து பெறும் ஸஹீஹூல் புகாரியில் இதைப்பற்றிய தெளிவான விளக்கம் இருந்தும், இந்த ஹதீஸை அறிவிக்கும் நபித்தோழர் ஹிஷாம் பின் உர்வா (ரழி) அவர்களே ஸாஅத் என்பது மரணத்தைக் குறிக்கும் என்று அந்த ஹதீஸிலேயே தெளிவாக சொல்லிவிட்ட பிறகும் வேண்டுமென்றே திட்டமிட்டு இவர்கள் உண்மையை மறைத்து எழுதியுள்ளார்கள்.

மேற்படி ஹதீஸ் புகாரியில் ‘சக்கராத்துல் மௌவ்த்’ அதாவது மரணவேளை, (அல்லது மரணத்தின் வேதனை) என்ற தலைப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இமாம் புகாரி (ரஹ்) அவர்களைப் பொருத்தவரை ஒரு ஹதீஸ் எந்தக்கருத்தைச் சொல்கிறதோ அதன் கருத்தைத்தான் அதற்குத் தலைப்பாக இட்டு பதிவு செய்வார்கள். உதாரணமாக தொழுகையைப் பற்றி வரும் ஹதீஸ்கள் அனைத்தையும் தொழுகையின் வாயில் எனப் பொருள்படும் ‘பாபுஸ் ஸலாத்’ என்று தலைப்பிட்டு பதிவார்கள். இந்த ஹதீஸை இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் இறுதி தீர்ப்பு நாளைப் பற்றிய ஹதீஸ்கள் பதியப்பட்டுள்ள தலைப்பில் பதியாமல் மரணத்தைப் பற்றிய செய்திகளை தெரிவிக்கும் ஹதீஸ்களின் வரிசையில் பதிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஸஹீஹூல் புகாரியின் விரிவுரை நூலான பத்ஹூல் பாரியில் இந்த ஹதீஸைப் பற்றிய முழுத்தகவலும் உள்ளது. அதாவது வெளிக்கிராமத்திலிருந்து மதினா வந்த ஒரு குழுவினர் ‘அஸ்ஸாஅத்’ எப்போது வரும் என்று நபி (ஸல்) அவர்களிடம் வினவுகின்றனர். அப்போதுதான் நபிகளார் அக்குழுவிலிருந்த ஒரு சிறுவரை சுட்டிக்காட்டி இவருக்கு வயது முதுமை ஆகும் முன்னர் ‘ஸாஅத்துகும்’ வந்துவிடும் என்கின்றனர்.

இந்த அறிவிப்பில் ‘ஸாஅத்’ ‘ஸாஅத்துகும்’ என்றால் என்ன என்பதை விளங்கிவிட்டாலே இந்த ஹதீஸ் எதைச் சொல்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம். ‘ஸாஅத்’ என்ற இந்த அரபிச் சொல் நேரம், வேளை, மரணம், இறுதிநாள் என்று பல அர்த்தங்களையும் கொடுக்கும். நபி (ஸல்) அவர்கள் பதிலளித்த ‘ஸாஅத்துகும்’ என்ற அரபி வார்த்தை ‘கும்’ என்ற முற்று பெற்றுள்ளது. ‘கும்’ என்பதற்கு தமிழில் முன்னிலை பன்மையான உங்களுடைய, உங்களின், உங்களுக்கு என்ற பொருளைத்தரும். எனவே ‘ஸாஅத்துகும்’ என்ற இந்த சொல் உங்களுடைய நேரம், உங்களுடைய வேளை, உங்களுடைய மரணம், உங்களுடைய இறுதிநாள் என்று பொருள்படும்.

இப்போது இவர்களின் கூற்றுப் படியே ‘ ஸாஅத்’ என்ற இந்த அரபிச் சொல்லிற்கு இறுதிநாள் என்றே பொருள் வைத்து மேற்கானும் ஹதீஸைப் படியுங்கள். அதாவது வெளிக்கிராமத்திலிருந்து மதினா வந்த ஒரு குழுவினர் இறுதிநாள் எப்போது வரும் என்று நபி (ஸல்) அவர்களிடம் வினவுகின்றனர். அப்போதுதான் நபிகளார் அக்குழுவிலிருந்த ஒரு சிறுவரை சுட்டிக்காட்டி இவருக்கு வயது முதுமை ஆகும் முன்னர் உங்களுடைய இறுதிநாள் வந்துவிடும் என்றார்கள் என்று பொருள் அமையும்.

அன்புள்ளம் கொண்ட நண்பர்களே! இப்போது விளங்கிக் கொள்ளுங்கள் பொய்யுரைத்தது யார் என்று? ‘ஸாஅத்துகும்’ என்ற அரபி வார்த்தைக்கு உங்களுடைய நேரம், உங்களுடைய வேளை, உங்களுடைய மரணம், உங்களுடைய இறுதிநாள் என்று எந்த வார்த்தைகளை அமைத்தாலும் இந்த ஹதீஸ் அக்குழுவின் மரணத்தை அல்லவா குறிக்கிறது. இணையத்தில் வலைப்பூக்கள் கட்டணமின்றி கிடைக்கிறது என்பதற்காக அதில் வாயில் வந்ததை எல்லாம் உளறிக் கொட்டுவதற்குப் பெயரா ஆய்வு? என்பதை நடுநிலையோடு சிந்தியுங்கள்.

இது போன்ற பல பொருள் கொடுக்கும் ஒரு சொல்லை எந்த நேரத்தில் எந்த இடத்தில் எந்த விஷயங்களுக்காக நபி (ஸல்) அவர்கள் பயன்படுத்தினார்கள் என்பதை நேரடியாக அறிந்தவர்கள் அந்த நபித்தோழர்கள். எனவே இவ்வாறான ஹதீஸ்களை அந்நபித்தோழர்கள் எவ்வாறு புரிந்து கொண்டார்களோ அதுபோல நாமும் புரிந்து கொண்டால் எந்தக் குழப்பங்களும் வராது.

ஒருநாள் நபி (ஸல்) அவர்கள் தனது தோழர்களை நோக்கி இன்று இப்பூமியில் வசிக்கும் எவரும் நூறு வருடங்களுக்குப் பின் உயிரோடு இருக்கமாட்டார்கள் என்ற கருத்துப்படக் கூறினார்கள். அதாவது தானும், தனது தோழர்களும், அன்று பூமியில் பிறந்து இருந்த அனைவரும் நூறு வருடங்களில் மரணமடைவார்கள் என்ற அறிவிப்பாகும் இது. அன்று உயிரோடு இருந்தவர்களுக்கான மரணக்கெடு நூறு வருடங்கள் என்பதைப்போல அந்த குழுவினரின் மரணக்கெடு அச்சிறுவனின் வயது முதிர்வாகும். அதை இப்படித்தான் புரிந்து கொள்ள வேண்டும்.

கியாமநாளின் பெரிய பத்து அடையாளங்களாக புகை மூட்டம், சூரியன் மேற்கே உதித்தல், அதிசயப்பிராணி, தஜ்ஜால் வருகை, நபி ஈஸா (அலை) வருகை, யஹ்ஜூஜ் மற்றும் மஹ்ஜூஜ் கூட்டம் வருகை, கிழக்கே ஒரு பூகம்பம், மேற்கே ஒரு பூகம்பம், அரபுப் புகுதியில் ஒரு பூகம்பம், பெரும் நெருப்பு ஆகியவற்றை நபி (ஸல்) அவர்கள் இறைவனின் முன்அறிவிப்பாக சொன்னார்கள். இவ்வாறு எவராலும் கணிக்க இயலாத காலத்தில் நிச்சயம் நடைபெறவிருக்கின்ற நிகழ்வுகளை கியாமநாளின் அத்தாட்சிகளாக அம்மக்களுக்குச் சொன்ன நபி (ஸல்) அவர்கள், அச்சிறுவனின் வயது முதிர்வுதான் மறுமை நாளின் அடையாளம் என்றிருந்தால் தன் கண்ணுக்கு முன்னால் இருக்கும் அச்சிறுவரைத்தான் மறுமைநாளின் முதன்மையான மிகப் பெரிய அடையாளமாக முன்னிலைப்படுத்தி இருப்பார்கள்.

இவ்வாறு கியாமநாள் வருவதற்கு முன்னர் நிகழவிருக்கும் பல அடையாளங்களையும் இறைவனின் முன்னறிவிப்பாகத் தெளிவாக விளக்கிச் சொன்ன நபி (ஸல்) அவர்கள் இதில் எந்த ஒரு நிகழ்வும் நடந்திராத அச்சூழ்நிலையில், அச்சிறுவரைக் குறித்து வரும் அந்த ஹதீஸை இவ்வுலக அழிவிற்கு முன்னரிவிப்பாகவோ, அளவுகோளாகவோ சொன்னார்கள் என்று அறிவுள்ள எவரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அந்த ஹதீஸ் மறுமைநாளைப் பற்றி சொல்லவில்லை மாறாக அக்குழுவினரின் மரணத்தைப் பற்றிதான் விளக்குகிறது என்றுதான் சாதாரணமாக விளங்குகிறது.

மறுமை நாள் எப்போது சம்பவிக்கும் என்பதை நான் அறிய மாட்டேன் என்று போதித்த நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியிருப்பார்களா? என்று இவர்கள் சிந்தித்திருந்தால்,

இந்த ஹதீஸை அறிவிக்கும் நபித்தோழர் ஹிஷாம் பின் உர்வா (ரழி) அவர்கள் ‘ஸாஅத்’ என்பது மரணத்தைக் குறிக்கும் என்று கூறியுள்ளதை இவர்கள் கவனித்திருந்தால்,

மேலும் இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸை மரணவேளை என்ற தலைப்பில் ஏன் பதிவு செய்ய வேண்டும் என்று இவர்கள் ஆய்வு செய்திருந்தால், முஹம்மது ஒரு பொய்யன் என்று நிதானமிழந்து, வசை மாறிப் பொழிந்து தங்களைத் தாங்களே இழிவுபடுத்திய அவலநிலை இவர்களுக்கு ஏற்பட்டிருக்காது.

நபி (ஸல்) அவர்களை உண்மையாளர்தான் என்பதை, இஸ்லாத்தை இவர்களைவிட வலிமையாக எதிர்த்த இவர்களின் முன்னோர்களான அபூஜஹ்ல் வகையறாக்களிலிருந்தும் முன்னர் நாம் நிறுவியுள்ளோம். அரபி மொழி பண்டிதர்களாயிருந்த அன்றைய மக்கா மதீனா நிராகரிப்பாளர்கள் கூட இந்த ஹதீஸில் ‘கும்’ என்ற வார்த்தையை வெட்டி எடுத்துவிட்டு குழப்பம் செய்து விவாதிக்க வில்லை. அந்த அன்சாரி சிறுவரின் மரணத்திற்குப் பிறகும் அன்று வாழ்ந்த இறைநிராகரிப்பவர்கள் எவரும் இந்த விஷயத்தில் முஹம்மது பொய் சொல்லிவிட்டார் என்று அவதூறு சொல்லவில்லை. அவர்கள் கூட இந்த ஹதீஸை சரியாக விளங்கியிருந்ததை உணர்கிறோம். எனவே இவர்கள் அந்த அபூஜஹ்ல் வகையறாக்களைவிட, மக்கா குறைஷி காபிர்களை விட, மதீனத்து நயவஞ்சகர்களை விட கொடிய எண்ணம் கொண்டவர்களாக, குறுமதி படைத்தவர்களாக இருப்பதை பார்க்கிறோம். அணுகுண்டைவிட ஆபத்தான அபூஜஹ்லைவிட மோசமான இவர்களின் பொய்களை நல்லெண்ணம் கொண்ட நாம் அனைவரும் அலட்சியம் செய்து ஒதுக்கிவிட கடமைப்பட்டுள்ளோம்.

பகிரங்க சவால்

இஸ்லாம் என்ற இந்த சத்திய மார்க்கம் ஏதோ சென்ற மாதம் துவங்கங்கப்பட்ட ஜாதி சங்கத்தைப் போல எண்ணிக்கொண்டு இஸ்லாத்தை ஆய்வு செய்கிறேன் பேர்வழி என்று இப்படியொரு அபத்தக்கட்டுரையை வடித்துள்ளார் கட்டுரையாளர். இஸ்லாம் என்பது இதைவிட பல கொடூர வசைமொழிகளையும் கடந்து, தன் மீது ஏவப்பட்ட, கணைகளாய் பாய்ந்த பல சவால்களையும் வென்று 1400 ஆண்டுகளுக்கும் மேலாக இவ்வுலகில் மேலோங்கி நிற்கிறது. காரணம் இது மனித கற்பனையில் தோன்றிய இதிகாசமோ, இஸமோ அல்ல. அனைத்துலகையும் படைத்த இறைவனால் தன் படைப்பினத்திற்கு வழங்கப்பட்ட முழுமையான வாழ்க்கை நெறி என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

இதற்கு மேலும் அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களை பொய்யர் என்பதில் உறுதியாக எவரும் இருப்பார்களேயானால், 1400 ஆண்டுகளாக இவ்வுலகில் எவரும் எதிர்கொண்டு வெற்றி பெறாத வல்ல இறைவனின் அந்த பகிரங்க சவாலையே இவர்களுக்கும் நாம் தொடுத்து முடிக்கிறோம்.

‘இவ் வேதத்தை அவர் பொய்யாகக் கற்பனை செய்து கொண்டார்’ என்று அவர்கள் கூறுகிறார்களா? ”(அப்படியானால்) நீங்களும் இதைப் போன்ற கற்பனை செய்யப்பட்ட பத்து அத்தியாயங்களை கொண்டு வாருங்கள் – நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால்! அல்லாஹ்வைத் தவிர்த்து உங்களுக்கு சாத்தியமான எல்லோரையுமே இதற்குத் துணை செய்ய அழைத்துக் கொள்ளுங்கள்” என்று (நபியே!) நீர் கூறுவீராக. (திருக்குர்ஆன் 13 : 11)

முஹம்மது (ஸல்) என்ற நம் அடியாருக்கு நாம் அருளியுள்ள வேதத்தில் நீங்கள் சந்தேகம் உடையோராக இருப்பீர்களானால், அந்த சந்தேகத்தில் உண்மை உடையோராகவும் இருப்பீர்களானால் அல்லாஹ்வைத்தவிர உங்கள் உதவியாளர்களை யெல்லாம் ஒன்றாக அழைத்து வைத்துக்கொண்டு இது போன்ற ஓர் அத்தியாயமேனும் கொன்டு வாருங்கள். அப்படி நீங்கள் செய்யாவிட்டால், அப்படிச் செய்ய உங்களால் திண்ணமாக முடியாது, மனிதர்களையும் கற்களையும் எரிபொருளாகக் கொண்ட நரக நெருப்பை அஞ்சிக் கொள்ளுங்கள். (அந்த நெருப்பு, இறைவனையும் அவன் வேதத்தையும் ஏற்க மறுக்கும்) காஃபிர்களுக்காகவே அது சித்தப்படுத்தப்பட்டுள்ளது. (திருக்குர்ஆன் 2 : 23, 24)

Hello world!

ஜூலை 11, 2007

Welcome to WordPress.com. This is your first post. Edit or delete it and start blogging!


Follow

Get every new post delivered to your Inbox.